Monday, August 25, 2008

‘புலம்பெயர் இலக்கியம’; என்ற தனி வகைமையின் தேவை

‘புலம்பெயர் இலக்கியம’; என்ற தனி வகைமையின் தேவை

புலம்பெயர் இலக்கியம் என்ற தனி வகைமை என கருதுவதற்கு இலக்கியப் பரப்பிலே பல வகையான காரணங்கள் முன்னிக்கின்றன। அதாவது, தமிழ் இலக்கிய வட்டத்தில் பல்வேறு வகையான இலக்கியங்கள் பல்வேறுபட்ட காலகட்டங்களில் தோன்றி அவ்விலக்கியங்களுக்கென்ற தனி வகைமையைக் கொண்டு அமைந்திருப்பதை தமிழ் இலக்கியங்களில் வரலாற்றுரீதியாகக் காணமுடிகின்றது. இவ்வகைமை முறையானது காலப்போக்கில் இலக்கியத்திற்குரிய மரபாகவும் காணப்படுகின்றது. ஒரு இலக்கியம் தோற்றம் பெறுவதற்கு அந்நிலை சார் உணர்வுநிலை, சமூகம், சூழல், பண்புநிலைகள், சமூகக் காரணிகளின் உந்துதல்கள், இழப்புக்கள், பாதிப்புக்கள் போன்ற பலகாரணிகள் முக்கியமாகின்றன. இவ்வாறு எழுந்த இலக்கியங்களாக தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும் போது சங்ககாலம் முதல் இன்றைக்கு பலவகைமைப் படுத்தப்பட்ட இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பது காலம் காட்டிநிற்கின்றது. அந்தவகையில் சங்க இலக்கியங்கள் இயற்கை முறமை கொண்ட இலக்கியங்களாகின்றன. சங்க மருவியகால இலக்கியங்கள் அறநிலை சார்பான இலக்கியங்களாகின்றன. பத்தி இலக்கியங்கள் உணர்வுநிலை சார் இலக்கியங்களாகின்றன. அதன்பின்னர் தோற்றம் பெறுகின்ற இலக்கியங்களாக வடிவநிலைசார்பான காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என மரபு முறை கொண்டு எழுந்த இலக்கியங்களாகும். இதன் பின்னர் தலித் இலக்கியம், முற்போக்கு இலக்கியம், நவீன இலக்கியம், பெண்ணியம் எனப்பல தரப்பட்ட இலக்கிய வடிவங்கள் தங்களுக்கென ஓர் மரபு முறையைக் கொண்டு கால மாற்றத்திற்கேற்ப வடிவம் பெற்றுள்ளமை இலக்கிய வரலாறு காட்டிநிற்கின்ற முக்கிய நிலை அம்சமாகின்றது. அந்த வகையிலே ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற தனி வகைமை இன்றைய காலத்திற்குத் தேவை என்பதாகும்.

புலம்பெயர் இலக்கியம் என்ற தனிவகைமைப் படுத்தல் என்பது இருபதாம் நூற்றாண்டின் எல்லைத் தாண்டும்போது உலகலாவிய பரப்பில் ஏற்படுகின்ற இயற்கை, அரசியல், பொருளாதாரம், சுகந்திரம் போன்ற காரணிகள் ஏற்படுத்திய மாற்றங்களால் மனித வாழ்வியல் பலவகையான மாற்றத்தைப் பெறுகின்றது। அந்தவகையில் புலம்பெயர்வு என்பது பலவகையான பரிமாணத்தைப் பெறுகின்றது। புலம்பெயர்வு என்பது கூட புகலிடம், அலைந்துழல்வு, இடப்பெயர்வு, போன்ற சொற்பிரயோக வடிவங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக அமைந்துள்ளது. ஆனால் புலம்பெயர்வு என்பது முழுமையாக வடிவம் கொடுப்பது போல் பலர் கருதுகின்றனர். புலம்பெயர்வு என்று முறைமைக்குள் வெளியாகின்ற இலக்கியங்கள் புகலிடம் சார்ந்த அநுபவங்களையும், அலைந்துழல்வு கொண்ட இன்னல்கள் துன்பங்கள் பட்டறிவுகள் போன்றவற்றையும் இடப்பெயர்வினால் ஏற்பட்ட காரணங்கள், ஏக்கங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்தை காணக்கூடியதாக அமைந்துள்ளது.

புலம்பெயர்வு இலக்கியம் என்ற தனி வகைமைப் படுத்தலின் அவசியம் யாது எனப்பார்க்க முன்னர் இவ்வகையான இலக்கியம் தோற்றம் பற்றிய சிறு விளக்கம் இந்தக் கட்டுரைக்குத் தேவை என கருதுகின்றேன். புலம்பெயர்வு என்பது காலகாலமாக நடைபெற்று வருகின்ற விடயமாக அமைகின்றது. ஆனால் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமை என்பது இருபத்தொராம் நூற்றாண்டின் பின்னர்தான் முனைப்புப் பெறுகின்றது. அதற்குக் காரணம் இன்று ஈழத்தமிழர் வாழ்க்கை என்பது புலம்பெயர்ந்தலையும் போராட்டத்தையும் அதன் விளைவாக பெற்ற அவலங்களையும் உள்ளட்கிய வாழ்க்கையாகவே மாறியுள்ளது. இனப்படுகொலைகள், பாலியல் துன்பங்கள், இனத்துவசங்கள், வெறியாட்டங்கள் என்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் தாம் புலம்பெயரும்போது பெற்றுக் கொண்ட இன்னல்கள், சிரமங்கள், புதிய அநுபவங்கள், பட்டறிவுகள், தாயகம் பற்றிய ஏக்கங்கள், பண்பாடும் பண்பாடு சார்பான சீரழிவுகள் என்பனவும் பற்றி தமது ஆக்கங்களை படைப்புக்களாக எழுதி வருகின்றனர் இவ்வகையான ஆக்கங்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கின்றது. இதுவரை காலமும் தமிழ் இலக்கியங்கள் பெற்றிராத புதிய வடிவமைப்பை பெற்றிருக்கின்றது. புதிய உணர்வுநிலை சார்பான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இலக்கிய உலகில் படைப்பாளிகள் கொண்டுள்ள மரபு முறையான வழிமுறை மாறி புதிய மரபு வழியாக மரபு வழிக்கு இப்புலம் பெயர்வு இட்டுச் செல்கின்றது. புதிய தலைமுறையினர் புதிய சூழலில் புதிய வகையான ஓர் இலக்கியத்தை படைக்கின்றனர். இவ்விலக்கியம் இந்தக் காலப்பகுதிக்கு ஏற்றுக் கொள்ளப்படுமளவிற்கு தமிழ் இலக்கிய உலகில் தலைசிறந்து நிற்கின்றது. முன்னைநாளில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற அமைப்பே தேவையில்லை என்று கூறிய சில அறிஞர் கூட்டம் இந்த புலம்பெயர் இலக்கியம் கொண்டிருக்கும் புதுமை, கரு, வடிவம், உணர்வுநிலை, அநுபவங்கள் போன்ற வெளிப்பாட்டைக் கொண்டு படைக்கப்படுகின்ற இலக்கியங்களை இக்காலகட்டதிற்கு ஏற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இதனைவிட புலம்பெயர் இலக்கியம் கொண்டுள்ள ‘புதுவகை அநுபவநிலை’ தமிழிலக்கியப் பரப்பில் இடம்பெறாதவை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
இப்புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமையின் வளர்ச்சிக்கு காரணமாக ஆரம்பகால கட்டத்தில் புலம்பெயர்வினை சுயவிருப்பு, அரசியல், பொருளாதார உந்துதல்களால் புலம்பெயர்க்கப்பட்டுச் சென்ற முதல் தலைமுறையினரிடம் இருந்த இலக்கிய ஈடுபாடும், ஏற்கனவே இவர்கள் இலக்கியப்பாரம்பரியம் கொண்டவர்களாகவும் படைப்பாளிகளாகவும் இருந்தமையால் புதிய சூழலில் புதுவகையான அநுபவங்களைப் பெற்று வாழ முற்பட்டபோது தமது வாழ்வாதாரங்களை பொருளாதாரரீதியல் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமையை தோற்றுவதற்கு வித்தாக அமைந்திருந்தனர்। இவர்களின் சிலர் தமது சொந்த முயற்சியால் தோற்றிவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் இலக்கியம் தொடர்பான படைப்புக்கள் போன்றனவே இன்றைய புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமையை மேலும் வலுப்படுத்தக் காரணிகளாக அமைந்துள்ளன. இந்த புலம்பெயர் இலக்கியம் இன்று தனிவகைமை பெற்றுள்ளதுடன் இன்றைய இளம் தலைமுறையினருக்கு புதிய இலக்கியத் தோற்றதிற்கான முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதனைவிட இன்றைய தலைமுறையினருக்கு தமிழர் என்ற அடையாளம் பேணும் முயற்சிக்கும் புலம்பபெயர் இலக்கியம் முன்னோடியாக அமைகின்றது. புலம்பெயர் இலக்கியம் என்பது தமிழரின் வரலாற்று ஆவணமாகவும் பல தேசத்தின் அநுபவநிலைகளையும் பண்பாடு சார்ந்த அம்சங்களையும், அரசியல் மாற்றங்களையும் இன்னும் பலவகையான விடயங்களையும் ஆவணப்படுத்தும் ஒரு இலக்கியமாகவும் அமைந்துள்ளது.

இவ்வாறான மேற்கூறப்பட்ட விடயங்களை ஆராயுமிடத்து “புலம்பெயர் இலக்கியம்” என்ற தனிவகைமைப்படுத்தல் தேவை என்பது புலனாகின்றது, தமிழ் இலக்கிய வரலாற்றிலே பலவகையான இலக்கயங்கள் மரபுரீதியாக தேன்றியுள்ளன. அவ்வாறு தோன்றிய இலக்கியங்களை பல்வேறு வகையில் வகைமை சுட்டுவதும், தனிவகைபை;படுத்துவதும் இலக்கிய உலகில் நடந்தேறிவருகின்ற உண்மையாகும். அந்தவகையில் காலத்தின் கண்ணாடியாக தமிழ் இலக்கியப் பரப்பில் தேன்றியிருக்கின்ற புதிய அநுபவநிலை சார்ந்த புதுமை இலக்கியமாக இன்றைய நூற்றாண்டில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் “புலம்பெயர் இலக்கியம்” என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தமிழ் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியத்திற்கு தனி வகைமைப் படுத்தல் அவசியம் தேவை என்றே நான் கருதுகின்றேன்.

ஆக்கம்: ராகவன் சண்முகநாதன்