Friday, December 28, 2007

புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா)


புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா)

இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் ஏராளமான மாற்றங்களைப் பெற்றுவருகின்றது. இவ்வாறான மாற்றங்களால் மனிதன் பெற்றமை ஏராளம். அதேவேளையில் மனிதன் இழந்தமையும் ஏராளம் எனலாம். இந்த வகையிலே மனிதன் புலம் பெயர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன. இவைகளில் முக்கியமானவையாக கருதப்படுவன பின்வருமாறு:

1. பொருளாதார ஆதாரமின்மை
2. இயற்கை சீற்றங்கள், இயற்கை வளமின்மை
3. அரசியல் காரணங்கள் (மதம், சாதி, கட்டுப்பாடுகள்)
4. படையெடுப்புக்கள்
5. இன்னொரு நாட்டின் மேல் இருக்கும் சொந்த விருப்பு

கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழன் அதிகமாக, பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றான். இந்த வகையிலே கனடா நாட்டை எனது ஆய்வுக்காக எடுத்துக் கொள்கின்றேன். கனடா நாட்டில் புலம் பெயர் தமிழர்களின் இருப்பு என்ற வகையிலே தமிழினத்தின் கலை, மொழி, பண்பாடு, விழுமியங்கள், சமுதாயமீளுருவாக்கம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை முன்னிறுத்திப் பார்க்கவேண்டும். பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களோடு அல்லது குழுவோடு தொடர்புடையது. இந்த வகையிலே தமிழர் பண்பாடானது கனடா நாட்டில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வாழ்கின்ற மக்களால் பாதுகாத்து வரப்படுகின்றது. கனடா நாட்டிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களில் அனேகமானோர் இலங்கையைச் சேர்ந்த தமிழர்களாவார்கள். மற்றையவர்கள் இந்தியா, மலேசியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் 250,000 பேர் மட்டில் கனடா நாட்டில் வாழ்கின்றனர். இதில் 200,000 போர் மட்டில் GTA Area பகுதியில் வாழ்கின்றனர். இத்தொகையான மக்கள் கனடாவிற்கு 20 வருடங்களாக தமது புலப்பெயர்வினை மேற்கொண்டு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை மேற்கோள் காட்டி “Canadian Tamil Chamber of Commerce” வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கருத்துக்கணிப்பு காட்டப்படுகின்றது.

“The Canadian Tamils of Sri Lankan origins (“Tamils”) are one of the fastest growing visible minority groups in the Greater Toronto Area. Canada is now home to more than 250,000 Tamils, of which approximately 200,000 live in the GTA.

The history of Tamils in Canada goes back to the 1940s, when a few hundred Tamils migrated to Canada. The 1983 communal riots in Sri Lanka precipitated the mass exodus of Tamils, with over 500,000 finding refuge in countries such as Canada, United Kingdom, Australia, Germany, France and Switzerland.

The vast majority of Tamils immigrated to Canada in the last 20 years. Canada is now home to the largest Tamil population outside of Sri Lanka. Within this short period of time, Tamils have established a mounting presence in multiple aspects of Canadian life: Business, academic, political and social. Then Tamil business community has gown in leaps and bounds, with over 2,000 Tamil-owned businesses in the GTA.” (Page 02; Fact and Figures: Census 1996 and 2001)

கனடா பல்லின மக்கள் இணைந்து வாழும் நாடாகும். இந்த வகையிலே கனடாவிற்கு புலம் பெயர்வினை மேற்கொண்டவர் வரிசையில் சீனர், வியட்நாமியர், இந்தியர், கிழக்கு ஐரோப்பியர் மற்றும் இலங்கை ஈழத்தமிழர் எனலாம். கனடாவிற்கு தஞ்சம் புகுந்தவர்களில் எண்ணிக்கையாலும், காலத்தாலும் கூடியவர்கள் சீனர்களே ஆவார். புலப்பெயர்வினால் தமது புகலிடங்களைப் பெற்றவர்கள் தங்கள் தங்களது மொழி, கலை, பண்பாட்டு மரபுகளையும் காத்து வருகின்றனர். இவ்வாறான பின்னனியில் கனடாவில் வாழும் ஈழத்தமிழர் வாழ்வியல் நிலைப்பாடுகளையும் அவர்;களின் இருப்பு பற்றி இவ்வாய்வுரையில் ஆராயவுள்ளேன்.
கனடா நாட்டில் குடியேறியுள்ள பல்வேறுபட்ட இனங்களில் தமிழினமும் தமது வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருவதைக் காணலாம். வணிகம், ஊடகத்துறை, அரசியல், கல்வி, சமயம், மொழி, கலை, பண்பாடு போன்ற விடயங்களில் முக்கியமானவை ஆகும். இவ்வாறான விடயங்களில் முன்னேற்றம் அடைந்த கனடா வாழ் தமிழினம் தம்மை பொருளாதாரரீதியல் பலப்படுத்திக்கொண்டு தமக்கென்றோர் அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தமக்கென்ற சொந்த வீடுகளையும், வணிகரீதியில் வர்த்தக தாபனங்களையும், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், கோவில்கள் பேன்றவற்றையும் கொண்டுள்ளனர். இவ்வினம் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைந்தமை பெருமைக்குரிய விடயமாகும். கனடிய நீரோட்டத்pல் பல்லின மக்களின் மத்தியில் கடின உழைப்பினால் முன்னேறி வருகின்ற இனமாக தமிழினம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வணிகம்:


கனடாத்தமிழர்களின் வணிகம் என்கின்ற வகையிலே இவர்களின் செயற்பாடுகள் மேலோங்கியிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. கனடாவாழ் தமிழ் மக்களின் வணிகப் பண்பாட்டுச் சிறப்பை அறிந்து கொள்ள கனடா நாட்டின் ரொரன்ரோ நகரில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக தங்கநகை வணிக நிறுவனங்கள், புடைவைக் கடைகள், தளபாடக் கடைகள், தமிழ் ஒளிவட்டுக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள் பேன்றவற்றைப் பெரும்பாலும் கொண்டமைந்துள்ளன. இதனைவிட தமிழர் வாழ்வியலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும் நிலையில் கனடிய தமிழர் வணிகம் அமைந்துள்ளது. இவற்றுக்கு எடுத்துக்காட்டாக கனடிய சூழலில் வெளிவருகின்ற வர்த்தக கையேடுகளை பார்ப்போமானால் தமிழன் வழிகாட்டி, வணிகம், தமிழர் மத்தியில், நம்மவர் மட்டில் போன்ற வர்த்தக கையேடுகள் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வருகின்ற கையேடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வணிக விளம்பரங்களை ஆண்டு தோறும் தாங்கிவருகின்றது.


இதனைவிட பிற கனடிய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கும் மேலாக கனடியப் பெரும்பாகத்தில் சிறிய, பெரிய கைத்தொழில் ஆலைகளையும் அமைத்து, தொழில் வழங்குநர்களாகவும், தொழிலதிபர்களாகவும் தமிழர் இருந்து வருகின்றனர். வீடு வாங்குதல், விற்றல், நிதி முகாமைத்துவம், வாழ்க்கை, போக்குவரத்து, வணிகம் போன்றவற்றுக்கான காப்புறுதி, போன்ற துறைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனைவிட வருடாவருடம் கனடிய சூழலில் நடைபெறுகின்ற வர்த்தகக் கண்காட்சிகள் முக்கியமானவையாகும். இவ்வாறான வணிகம் பிற சமூகத்துடன் இணைந்தும், வர்த்தகப் போட்டிகளுக்கு மத்தியிலும் செயல்படுவதைப் பார்க்கும் போது, எதிர்காலத்தில் பெரும் வணிக நிறுவனங்களை நிறுவி பொருள் வளம் சேர்கக் கூடியதன்மை புலம்பெயர் தமிழர் வணிகரீதியில் காணக்கூடியதாகவுள்ளது.

ஊடகத்துறை:


ஊடகத்துறை வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எனலாம். அந்த வகையிலே தமிழர் ஊடகத்துறையானது கனடிய சூழலில் முக்கிய பங்கை வகிக்கின்றது. கனடாவில் பத்திரிகைத்துறை, வானொலி – தொலைக்காட்சி, இலக்கிய வெளியீடுகள் திரைப்படங்கள் போன்றவை முக்கியமானவையாகும். கனடா நாட்டில் பல்வேறு மகாணங்களில் பல பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரொறன்ரோவில் தமிழ் நாளிதழ்கள் இல்லாவிட்டாலும் வார இதழ்கள் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகின்ற பத்திரிகைகளில் ஈழமுரசு, தமிழர் செந்தாமரை, உதயன், முழக்கம், நம்நாடு, முரசொலி முதலிய இலவச வார இதழ்கள் வெளியாகின்றன. இவற்றைவிட உலகத்தமிழர், ஈழநாடு போன்ற பத்திரிகைகள் விற்பனையாகின்றன. இலவசப்பத்திரிகைகள் மக்களிடத்தே போதிய வரவேற்பை பெற்றிருக்கவில்லை என்றே கூறலாம். இதற்கு காரணம் அதிக அளவு விளம்பரங்களை தாங்கி வருவதையே காரணம் எனக்கொள்ளலாம். பொதுவாக இவ்விதழ்களை வயது வந்தவர்கள் பொரும்பாலும் பார்த்து வருகின்றனர். இதன் சிறுவர், இளையோரின் வாசிப்பு பங்கு மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றது எனலாம்.

இதனைப்போலவே வானொலி – தொலைக்காட்சிகளின் பங்கு எவ்வாறு இருக்கின்றது எனப்பார்ப்போமே ஆனால் இரண்டு இலட்சத்திற்கு மேல் தமிழர் வாழும் இந்நாட்டில் எத்தனைபேர்; வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் கொண்டுள்ளனர் எனப்பார்க்க வேண்டியுள்ளது. கனடாவில் ஐந்து வானொலிகளுக்கு மேல் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதே போன்று தொலைக்காட்சி சேவையும் நான்கிற்கு மேலாக இயங்கிவருகின்றது. வானெலி – தொலைக்காட்சிகளில் கவிதை, நாடகம், சிறுகதை, சந்திப்புக்கள், தாயகவலம், செய்திகள், விளையாட்டுக்கள், சிறுவர் மற்றும் வயோதிபர் நிகழ்வுகள் போன்றன இடம் பெறுகின்றன. இந்த வகையிலே பல்வேறு வகையான நிகழ்வுகளை ஒலிபரப்பி போதுமனா வகையில் தமிழர்களுக்கு சேவையாற்றுகின்றன.


இலக்கிய வெளியீடுகள் என்கின்ற பார்வையில் கனடா நாட்டில் வாரத்திற்கு ஒன்றென்கின்ற அளவில் படைப்பாளிகளின் வெளியீடுகள் சிறுகதைப் புத்தகமாகவே, கவிதை, இலக்கியம், சமயம், சஞ்சிகை, ஆண்டு மலர்களாகவே வெளியாகிவருகின்றன. கனடா நாட்டில் புலம் பெயர்ந்து வந்த இத்தமிழர் தமது ஊர்களின் பெயராலும், தமது தாயக பாடசாலைகளின் பெயராலும் படைப்பாழிகள் கழகம், எழுத்தாளர் இணையம், தமிழிசைக் கலாமன்றம், பேன்றவற்றையும் பழைய மாணவர் சங்கங்கள் போன்றவற்றையும் அமைத்து பலவிதமான படைப்புக்களை வெளியிடுகின்றன. இதுவரை ஏறத்தாழ பெருந்தொகையான புலம் பெயர் இலக்கியங்கள் வெளியாகிவிட்டன, இன்னும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன எனலாம்.
திரைப்படங்கள் என்ற பார்வையிலே தமிழகப் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. ஒவ்வொரு நாளைக்கு ஒரு திரைப்படம் என்ற அளவில்லாது இரண்டு முன்று என்கின்ற வீதத்தில் இளைவட்டுக்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் பார்த்து வருகின்றனர். இத்திரைப்படங்கள் தமிழகத்தில் தமிழர் பண்பாட்டை சீரழிக்கின்றது என்பதைவிட இவ்வகையாக திரைப்பட மோகம் கனடா நாட்டிலும் பரவி வருகின்றது. இதற்கு ஆதாரமாக திரையிசை நடனம் பலவிதமான அரங்குகளிலும் நடந்தேறிவருகின்றமையே ஆகும். இவ்வகையான திரையிசை நடனங்கள் மிகுந்த செல்வாக்கைப் பெற்று வருகின்றமையை காணக்கூடியதகாவுள்ளது. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் வீட்டில் தமிழ் மொழியை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஓர் கருவியாக அமைகின்றது. கனடா நாட்டில் திரைப்படக் கலைத்துறையும் தனது முயற்சிகளை மேற்கொண்டு பல குறும்படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

அரசியல் :


கனடிய அரசியல் நீரோட்டத்தில் தமிழினம் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் வசிக்கும் தமிழர் தொகை ஏறத்தாழ இரண்டு இலட்சம் எனக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இந்த வகையிலே தமிழினத்தின் கனடிய அரசியல் நுழைவு குறைவாகவே காணப்படுகின்றது. கனடாவின் மைய, மாநில, மாநகர அரசியலில் பங்குபெற வேண்டும். தமிழர்களில் பலர் கனடிய அரசியலில் பங்கு கொள்வதற்கு தகமையுடையவர்களாக இருக்கின்றனர். அந்த வகையிலே சீனர், சீக்கியர் வரிசையில் தமிழர்களும் பங்கு கொண்டு தமிழினத்தின் அவலங்களுக்கும், உரிமைக்குரலுக்கும் வகைசெய்ய வேண்டும். இவ்வாறான சாத்தியங்கள் தமிழர்களின் ஒற்றுமையிலேதான் உருவாகும்.

கல்வி :


புலம்பெயர்ந்து வாழும் கனடிய தமிழ் சமூகம் கனடிய மண்ணில் பல்லின மக்கள் வாழும் பகுதிகளில் கல்வியில் சாதனை படைக்க கூடியதாக முன்னேற்றம் கொண்டுள்ளனர். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்கள் சாதனை செய்யுமளவிற்கு தமது கல்வியில் காணப்படுகின்றனர். கனடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்டம், மருத்துவம், வணிகம், சமூகவியல், கணணி, அச்சகம், படத்தயாரிப்பு, சிறுகைத்தொழில், போன்ற பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர் எனலாம். இவர்களின் கல்வியின் தரம் கனடிய தேசிய நீரோட்டத்தின் தரத்தில் முன்னேற்றமைந்த தொன்றாகும் எனக்கூறலாம்.

சமயம் :


கனடா நாட்டில் பல்லின நாட்டு மக்கள் வாழ்கின்றமையினால் அவர்கள் தத்தம் மதங்களுக்குரிய வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையிலே கனடியச் சூழலில் தமிழ்ப்பண்பாட்டு இறை வழிபாடு குறிப்பிடத்தக்கது. கனடியச் சூழலில் பெரும்பாலான சைவக்கோவில்களை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாட்டில் இன்னும் பெருவாரியான கோவில்கள் தோன்ற சாத்தியக்கூறுகள் இருந்து வருகின்றன எனலாம். கனடாவில் தோன்றியுள்ள சைவக்கோவில்களில் அனைத்து சமய விழாக்களும், நோன்புகளும், திருவிழாக்களும், சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இவற்றைவிட கோவில்களில் சைவமும் தமிழும் தக்க வைப்பதற்காக சைவ தமிழ் வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இருந்த போதிலும் கனடிய இளம் தலைமுறையினருக்கு சமய நாட்டமும், தமிழ் மொழி நாட்டமும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கனடாவில் மிக முக்கியமான அமைப்பாக கோவில்கள் இடம் பெற்றுள்ள இடவசதிகளை பார்க்க வேண்டியுள்ளது. கனடா சூழலில் சில கோவில்களே இடவசதி கொண்டு கோவிலுக்கான கட்டமைப்பினை கொண்டு அமையப்பெற்றுள்ளன. பல கோவில்கள் தொழிற்சாலைகள், வர்த்தகப் பாவனையிடங்கள் போன்றவிடங்களில் அமையப்பெற்றுள்ளன. சில கோவில்கள் காலப்போக்கில் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. இக்கோவில்களுக்கு பெருந்தொகையான மக்கள் சமூகம் அளிப்பதுண்டு. தாயகத்தில் நடந்தேறிய சிறு திருவிழாக்கள் தொடக்கம் பெருவிழா கொண்டு இங்கு நடந்தேறி வருகின்றது. இத்திருவிழாவிற்கு போகும் பத்தர்கள் தமது பண்பாட்டு உடையணிந்து செல்வது வழக்கமாகும். இத்திருவிழாவிற்கு உபயகாரர்களாக பொதுமக்கள், தமிழர் வியாபார தாபனங்கள், வர்த்தகப்பிரமுகர்கள் போன்றோர் இடம்பெறுகின்றனர். இவ்வகையான சைவக்கோவில்கள் தமிழர்களின் மத வளர்ச்சிக்கு போதிய பங்களித்தாலும், வியாபார நோக்குடன் செல்லும் பார்வையும் சில கோவில்களில் காணப்படுகின்றன என்பது உண்மையான விடயமாகும். காலப்போக்கில் தம்மை பொருளாதராரீதியல் வலுப்பெற்றபின்னர் இத்தகைய போக்கை மாற்றியமைக்கும் என நம்பலாம். இவற்றைவிட தமிழர்களின் பிறமதங்களான கிறஸ்தவ மதங்களும், முஸ்லிம் மதங்களும் கனடியச் சூழலுக்கு ஏற்றவகையிலே தமது மதவளர்ச்சிக்கும், வழிபாட்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்நாட்டில் கிறிஸ்தவ மத்தினருக்கு உதவிகளை வழங்கியதன் பெயரால் சகல வசதிகளையும் பெற்று தமிழிலேயே பூசைகளை நடாத்திவருகின்றனர். இதனைப் போன்றே மற்றைய இனத்தவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பொதுவாக கனடிய நீரோட்டத்தில் புலம் பெயர் தமிழினம் தமது சமயங்களை தம்முடன் இணைத்து செயற்பட்டு வருகின்றது.

மொழி:


பண்பாட்டின் எடுத்துக்காட்டாக மொழி விளங்குகின்றது. கனடாத் தமிழரது மொழி வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க நிலைப்பாடானது மொழியினூடகவே ஓர் இனம் தன்னை அடையாளம் காட்டுகின்றது. கனடியச் சூழலில் தமிழ் மொழியை காத்துவருவதில் கனடிய அரசும் தமிழர் சமூக அமைப்புக்களும் முதன்மை காட்டிவருகின்றன. கனடிய அரசின் மாநில அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ் மொழி கற்பிற்கப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகுமுக வகுப்புக்குரிய திறமைச் சித்தி பெறுவதற்குரிய வாய்ப்பும் தமிழ் மாணவர்களுக்கு உள்ளது. இவற்றைவிட அரச அலுவலகங்கள், பாடசாலைகள், முதலான பொதுவிடங்களில் தமிழில் மொழி பெயர்ப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றது. இவற்றைவிட அரச வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள், அறிவித்தல்கள் போன்றனவும் தமிழிலும் வெளியிடப்படுகின்றன.
தமிழ் மொழியைக் கற்பிக்க சில தமிழ் நிறுவனங்கள் முன்னெடுத்து நடாத்திவருகின்றன. தமிழ் மொழி கற்பித்தல் எவ்விதமாக இருந்தாலும் வீட்டு மொழியாக பல வீடுகளில் ஆங்கில மோகம் காணப்படுவது தமிழ் மொழிக்குரிய கவலைக்கிடமான நிலமைதான் காணப்படுகின்றது. வீட்டு மொழியாக தமிழ் பேசுபவர்களின் பிள்ளைகளிலும், ஆங்கிலம் பேசுபவர்களின் பிள்ளைகளிலும் பண்பாட்டுரீதியல் பல வேறுபாடுகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதென்றேயாகும். நாளடைவில் இவர்களின் பண்பாடு தமிழ்ப்பண்பாட்டில் இருந்து விலகி வேற்றினப்பண்பாட்டு சாயல் காணப்படும் நிலமை ஏற்படும். கனடியச் சூழலிலே தமிழ் மொழியானது தனது அடையாளத்தை தக்வைக்கின்ற நிலமையிலேயே இருக்கின்றது.

கலை:


தமிழர்களின் கலைவிழாகள் எண்ணிக்கையால் உயர்ந்தே காணப்படுகின்றது. தாயகத்தில் கூட நடந்தேறாதளவு கலை விழாக்கள் கனடிய புலம் பெயர் நாட்டில் நடைபெறுகின்றன எனலாம். கனடியச் சூழலில் பல எழுச்சி தரும் கலைவிழாகள், தாயகப் பின்புலத்தை தாங்கிவரும் கலைவிழாக்கள், திரையிசை, சினிமா நட்சத்திர கலைவிழாக்கள் போன்றனவும் அரங்கேற்றங்கள், சங்கங்களின் விழாக்கள், பழையமாணவர் விழாக்கள் போன்றனவும் நடைபெற்றுவருகின்றன. இவற்றைவிட சமய அமைப்புக்கள், கலைக்கழகங்கள், இசை – நடனக் கல்லூரிகள் போன்றனவும் ஆண்டுதோறும் விழாக்களை நடாத்திவருகின்றன. இவ்வகையான விழாக்கள் புலம் பெயர்ந்து கனடியச் சூழலில் பல்கலாச்சார மக்களுடன் வாழும் தமிழனத்தினருக்கு தமிழப் பண்பாட்டை அறிவுறுத்துவனவாகவும், நினைவூட்டுவனவாகவும் அமைகின்றன.

இவற்றைவிட கனடிய மண்ணில் பிறந்த தமிழ் குழந்தை தொடங்கி புலப்பெயர்வினால் வந்து குடியேறிய குழந்தை தொட்டு தமிழ் இசையில் ஆர்வம் செலுத்தி வருகின்றது. இங்கு வாழும் இளம் சந்ததியினர் பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், பல தமிழ்ப்பண்பாட்டு இசைக் கருவிகளையும் வாசிப்பதிலும் பயிற்சி பெற்றும் ஆர்வம்காட்டியும் வருகின்றனர்;. பொதுவாக தமிழினத்தின் கலை முன்னிலையில் நிற்கின்றது. அதனைவிட கலை நிகழ்ச்சிகள் பொதுவாக எல்லாம் பண்பாடு சார்ந்தது என்று கூறாவிட்டாலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப தமது பண்பாட்டுக்குள் கலைகளைக் கொண்டு கலைநிகழ்வுகளை நடாத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பண்பாடு :


பண்பாட்டின் பல விழுமியங்களையும் செயற்பாடுகளையும் கொண்டமைந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்து கனடிய சமுதாயத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் தங்களது பண்பாட்டின் தன்மையை இழக்கவில்லை. புலம் பெயர்ந்து அன்னிய தேசத்தில் வாழ்ந்தாலும் தமது மொழி, கலை, கலாச்சாரம், விழுமியங்கள் போன்றவற்றை பாதுகாத்துக் கொண்டும் அடுத்து இளம் தலைமுறைக்கும் அதனைக் கடத்திச் செல்லுகின்றார்கள். எவ்வாறு இருப்பினும் ஓர் இனத்தின் அடையாத்தை இழக்காமல் இருப்பதற்கு மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையிலே மொழியைக் காத்து அதனையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் கனடா வாழ் புலம் பெயர் தமிழர் சமுதாயத்திற்கு இருக்கின்ற கடமையாகும். இவற்றைவிட தமிழ் மக்கள் தமது உணவு, உடை போன்றவற்றில் எந்தவித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை. காலநிலைக்கு ஏற்ப தமது பாவனைகளை மாற்றிக் கொண்டாலும் தமது தேவைகருதியும், கலைவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தமது பாரம்பரிய உடை, உணவுகளை உபயோகிக்கின்றனர் எனலாம். பொதுவாக புலம் பெயர் தமிழினத்தின் பண்பாடு கனடிய நீரோட்டத்தில் கலந்தாலும் தமிழினத்துடன் நிலைத்து நிற்கின்றது.

முடிவுரை:


ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் புலம் பெயர்வு என்பது மனித இனத்திற்கு மட்டுமின்றி உயிர்வாழ் இனங்களுக்கே ஓர் பாரிய மாற்றத்தை தந்துவருகின்றது. இந்தவகையிலே பாரியளவில் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் இனமாக தமிழினமும் கருதப்படுகின்றது எனலாம். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தாயக ஏக்கத்துடன் தமது முயற்சிகளிலும் தம்மை புலம்பெயர்ந்த சூழலில் தமது இனத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தி அடையாளம் கண்டுககொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமேயாகும். கனடியத் தமிழரிடையே தமிழர் பண்பாட்டை, விழுமியங்களை, கலைகள், மற்றும் வணிகம் போன்றவற்றை எடுத்துக்காட்டும் எதிர்காலம் அமையும். தமிழர் தமது அடையாளத்தை இழக்காது தமிழ் பண்பாட்டுடன் கனடாவில் நிலைபெற்றிருக்க புலம் பெயர்ந்த மண்ணில் ஒற்றுமையை நிலைநாட்டி வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமையும் போது கனடிய மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் நிலையானது மேலும் சிறப்பாக அமையும் என நம்பலாம்.

April 29th 2007


உசாத்துணை

– References

Prepared by Adventa Strategies Inc. Emergence of the Tamil Community in the GTA: FACT AND FIGURES; Canadian Tamils’ Chamber of Commerce. www.ctcc.ca

2 comments:

மாமூலன் said...

Is this Ra Gavan?
Wishes!

J.S.Anarkali said...

hello sir I read u'r research paper. i want some help from you. because i'm going to do ph.d., in the same maigrated people's.