Thursday, December 20, 2007

மொழியியல் - ஆய்வுக்கட்டுரை.

மொழியியல் - ஆய்வுக்கட்டுரை.

மொழியியல் ஓர் அறிவியல். ஆராய்க?

மொழி ஒரு கருவி. ஒரு தகவல் பரிமாற்ற சாதனம் என்று பலராலும் சொல்லப்பட்டு வருகின்றதைப் பார்கின்றோம். மொழியானதது சிந்தனைக்கும் செயலுக்கும் கருவியாக இருக்கின்றது. மொழி என்பது பண்பாட்டு நிறுவனமாக இருக்கின்றது. நீண்ட வரலாற்றின் வெளிப்பாடு, தேசிய இனத்தின் இலச்சனை, உணர்ச்சி பூர்வமான ஒர் இலக்கு. மனிதனின் அனுபவங்களும் உணர்புகளும், கற்பனைகளும், சிந்தனைகளும் தடம் பதித்துச் செதுக்கிய மொழி மனிதப் பண்பாடு அறிவியல் துறைகள் எல்லாவற்றிக்கும் விளங்குகின்றது.

மானிடவயலாளர் மாவினோவஸ்கியின் கூற்றின்படி மொழியை அறிவது என்பது பண்பாட்டினை அறிவதாகும். ஏனெனில், பண்பாட்டுச் சூழ்நிலையின் சூழமைவினை (Context of Situation) அது எப்போதும் பண்பாடு சார்ந்தே அமைகின்றது. பண்பாடும் மொழியும், பண்பாடு -> மொழி -> பண்பாடு என்ற உறவினை அல்லது பண்பாடு -> மொழி என்ற உறவினைக் கொண்டது. எனவே மொழி பற்றிய கோட்பாடு ( மொழியியல்) பண்பாடு பற்றிய கோட்பாட்டின் ஓர் அங்கமாக விளங்குகின்றது என மாவினோவஸ்கி கூறுகின்றார்.

இலக்கியத் திறனாய்வின் சிறப்பான அம்சங்களில் ஒன்று மொழியியல் வழியிலான அணுகுமுறையாகும். மொழியியலைப் பொறுத்த மட்டிலே அது இயல்பாகவே இலக்கியத்தை தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்தில் இருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததனால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகின்றது.

மொழியியல் அறிவியல் எனப்பார்க்கும் போது அதன் பல வழிகளிலும் பார்க்கத் தோன்றுகின்றது. அவற்றை பல கூறுகளாக விளக்கலாம். அதன் வாயிலாக மொழியியலை ஆறு வகைப் பிரிவுகளா வகைப்படுத்திப் பார்ப்போம்.

1. மொழி என்பது ஓர் ஒழுங்கமைவு.

2. அதற்கு நெருக்கமான உளவு கொண்ட பல உள் ஒழுங்குகள் உண்டு.

3. மரபுகளின் தொடர்ச்சியாகவும் காலம்இ இடம், தேவை கருதிய வளர்ச்சியாகவும்

4. சமுதாயத்தின் பண்பாட்டின் ஓர் உற்பத்திப் பொருளாகவும் சாதனமாகவும் உள்ள மொழி அச்சமுதாயத்தின் புலப்பாடகவும் பொருட்டாகவும், இலச்சனையாகவும் குறியீடாகவும் செயற்பாடு கொண்டது.

5. பல படிநிலைகளைக் கொண்ட அம்மொழி பல பரிமாணங்களையும் எல்லைகளையும் ஊடகங்களாகக் கொண்டது.

6. அது அறிவியல் பூர்வமாக புறவயநிலையில் - ஆனால் அதன் அகவயச் சார்பு சிதைவுறாமல் புலப்படும் படியாக ஆராயப்படக்கூடியது.

மொழியியலில் இந்த நம்பிக்கையும் ஆர்வமும் வலுவும் அறிவியல் ஆராய்ச்சியை மொழியிலயல்ரீதியாக அணுகுவதற்கு நல்ல தளம் அமைத்துவிடுகின்றது. மொழியிலில் மொழியமைப்புக் கூறுகளாகிய ஒலியியலும் சொல்லியலும் மிகுந்த முக்கியிடம் பெறுகின்றன எனலாம்.
மொழியியல் வழித்திறனாய்வு உருவாகி வளர்வதற்கு ஆதாரமாக அமைந்த ஒன்றோரொன்று தொடர்புடைய அறிவோட்டங்கள் அறிவியல் ஆராட்சிகள் போன்றன பெரும் வீச்சும் Russian Formalism செல்வாக்கும் கொண்ட இதன் Prague Structuralism நடைமுறைகள் போன்றவை மொழியியல் திறனாய்விற்கு மறுமலர்ச்சியும் உந்துதலையும் தருவதாகவும் அமைந்து எனலாம்.
இந்த வகையிலே தமிழ் மொழியில் தொல்காப்பியர் இத்தகையவொரு பண்பிணை அறிந்துள்ளார். அவர் எழுத்துக்கள் பற்றியும், செய்யுள் வழக்குப் பற்றியும் மேலும் மொழியின் கூறுகள் பற்றியும் அறிவியல் சார்ந்து ஆராய்ந்துள்ளார். இவரைத் தொடர்ந்து வழி நூலசிரியர்களும் மொழியியல் பற்றி அவர்களது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் எனலாம். இவ்வகையான தொல்காப்பியரின் அணுகு முறைகள் கருத்தோட்டங்களோடு பொருத்திவைத்துப் பார்ப்பதற்கு நிறையவிடங்கள் உண்டு.
மொழியியல் கூறுகளை அளவு நிலையில் பருத்தும் கணக்கிட்டும் கூறுகின்ற புள்ளியியல் முறையிலான முயற்சி சில மொழியியலாளர்களாலும், மொழியியல் அறிந்த புள்ளியியலாளர்களும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மொழியியல் ஒரு புறவய ஆராய்வு என்ற கருத்து மேலீட்டினால் மொழியியலாளர்கள் சிலர் பகுப்புக்கள் தருவதிலும் அவற்றை விபரிப்பதிலுமே அதிக கவனம் செலுத்துவதுண்டு. இன்றும் பல அறிவியல் நடையியலளர்கள் உருவவியலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, இலக்கியமொழி வழக்கினை மொழியின் ஏனைய வழக்கு நிலையிலிருந்து தனிமைப்படுத்தி அதனை சிறப்பிப்பதாக நினைக்கின்றனர் எனலாம்.
மொழியியல் திறனாய்வு அதன் ஆரம்பகால மரபுவழி உருவவியல் பார்வையிலிருந்தும் அதற்குட்பட்ட ‘நவீன திறனாய்வு’ என்னும் போக்கிலிருந்தும் விடுபட முயன்று வருகின்றது. இந்த வகையிலே தத்துவ ஆராய்ச்சியும் மொழிக்கு இலக்கணம் கானும் முயற்சியும் வளர்ந்த பின்னரே மொழியைப் பற்றிய உண்மையான ஆராய்ச்சி தொடங்கியது எனக்கூறலாம். இவ்வகையில் முன்னினையில் நின்றவர்கள், இந்தியர்களும், கிரேக்கர்களும் ஆவார்கள்.


தொல்காப்பியமும் பாணினீயமும் இவ்வாறு தோன்றிய மொழியியல் அறிவியல் ஆராய்ச்சி நூற்களில் மிகப்பழமையானவை. மொழியியலின் தந்தையெனக்கருதப்படும் இலெனாட் பளும்ஃமில்டு (Leonard Bloomfield) பாணினியில் இலக்கணத்தைக் கற்றதனாலேயே தமக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றின என்கின்றார். இந்த வகையிலே கிரேக்கர்களை ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர் பிளேட்டோ. இவர் பொருளுக்கும் அதன் பெயருக்கும் தொடர்பு இருப்பதாக தனது அறிவியல் ஆராய்ச்சியில் கருதினார். கிரேக்கர்கள் ஊக முறையில் ஆராய்ந்தனர். இதனை ஆங்கிலத்தில் (Speculative) எனப்படும் முறையேயாகும். இந்த வகையிலே பிளேட்டோவின் மாணவர் அரிட்டாட்டில் தம் ஆசிரியர் போக்கினின்றும் மாறுபட்டவர். அவர் மொழிமரபானது (Convention) உடன்பாட்டாலும் (Agreement) உண்டாகியது என நம்பினார். குறைந்தது இரண்டுபேர் இந்தப் பொருளுக்கு இதுதான் ஒலிக்குறியென உடன்பட்டிருக்க வேண்டுமெனவும் அதுவே அப்பொருளுக்குப் பெயராயிற்று என நம்பினார்.

ஓரு மொழியை ஆய்வுசெய்வதற்கு அம்மொழியை மொழிபெயர்ப்புச் செய்வது, பிற மொழிச் சொற்களின் தொகுப்பு போன்றன முக்கியமானவை. மொழியிலலைப் பொறுத்த வகையிலே பதினாறாம் நூற்றாண்டை இக்கால மொழியியலின் தொடக்ககாலம் என்று கூறலாம். இதற்குக் காரணம் பிறமொழியறிவும் அச்சு இயந்திரம் வந்த பின்னே மொழிபற்றிய ஆய்வின் செயற்பாடாகும். இவர்களின் வழக்கில் இருவரும் மொழிகளை ஆராய்ந்து இலக்கணம் காண வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர் எனலாம்.
அறிவியல் வழியில் மொழியியலை வழிகாட்டியவர்களில் அடுத்தர் ஹர்டர். 1772 இல் இவர் மொழிகளின் தேற்றத்தைப் பற்றிய கட்டுரையில் மொழி கடவுளால் கொடுக்கப்பட்டது என்ற கருத்தைக் கண்டித்தார். மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான் என்ற கருத்தையும் மறுத்தார். பிறக்கும் குழந்தைக்குப் பிறக்க வேண்டும் என்ற தூண்டுதல் அமைந்திருப்பது போல மனிதனிடமும் அமைந்த தூண்டுதல் ஒன்றே மொழியின் தோற்றத்திற்குக் காரணம் என்றார். இதனைப் போலவே சர் வில்லியம் ஐன்ஸ் என்ற ஆங்கிலேயர் வடமொழியை நன்கு கற்றவர். வடமொழிக்கும் ஜரோப்பிய மொழிக்குமான தொடர்பினை கண்டு இம்மொழிகள் ஒரே மூலத்தில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாகக் கூறியவர் இவர்தான். இதனைப் போன்றே பலர் இவ்வகையான மொழியியல் சார்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் மேற்க்கொண்டுள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டினை வரலாற்று மொழியியலின் பொற்காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டினை வரலாற்று விளக்க மொழியியலின் பொற்காலம் என்று கொள்ளலாம். இந்நூற்றாண்டிலே விளக்க மொழியியலுக்குரிய கோட்பாடுகளை விளக்கியவர்களில் முதல்வராக பெர்டினாணட் சசூர். (Ferdinand de saussure 1857 – 1913). ஜரோப்பாவில் சசூருக்குப் பின் தோன்றியவர்கள் இவருடைய கருத்துக்களால் வளர்ந்து வெவ்வேறு வகையான அறிவியல் கோட்பாடுகளை தெரிவித்தனர். சுசூர் கூறிய மதிப்புக்கள் பின்னர் பலவாறு பயன்பட்டன. இவர் தனது ஆய்வின் படி இரண்டு விதமான மதிப்புக்களைக் கூறினார். ஓன்று போச்சில் அடுத்தடுத்து தோன்றுவது. மற்றென்று சொற்களில் பொருள் கோளில் அமைவது என்றார். இவரும் இவரைப் பின்பற்றிய ஆய்வாளரும் மொழியின் ஒலியமைப்பை ஆராய்வதற்கு வேற்றுநிலைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே மொழியியலில் காணப்படுகின்ற ஒலிகளின் அமைப்புத்தொடை காண முடியும் என்கின்றார். இவ்வாறு தோன்றிய கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களும் தோன்றின எனலாம். இவ்வகையிலே எழுந்த எதிர்ப்பின் முடிவாக சசூர் வரலாற்று மொழியியலையும், விளக்க மொழியியலையும் ஒரே விதமான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய முடியாது எனத் தெரிவித்தார். இது இவ்வாறு இருக்க வரலாற்று மொழியியலின் மொழியின் இலக்கண அமைதிகளில் காணப்படும் வேறுபாடுகளுக்குக் காரணமான ஒலி மாற்றங்களே முக்கியமானவை. அம் மாற்றங்களே செயற்பாட்டு மாற்றங்கள் எனப்படும். இதனால் இம்மாற்றங்களில் இழையும் (Harmony) சிக்கனமும் (Economy) இருக்கின்றன. எனவேதான் தனித்து நிற்கும் மாற்றங்களும் அமைப்பு முறைக்கு அகப்படா மாற்றங்களும் மறைந்து விடுகின்றன.

மேலும் இந்நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு புரட்சிகரமான கோட்பாடு மாற்றிலக்கணம் (Transformational Grammar). இக்கோட்பாட்டை 1957 இல் நோ அம் சோம்ஸ்கி (Noam Chomsky) வெளியிட்டார். இவ்வகையாக மொழியில் சம்பந்தமான மொழியியல் அறிவியல் ஆராட்கசிகள் பல்வேறு மொழியியல் கூறுகளை நோக்கி விரிவடைகின்றன. சில எடுத்துக்காட்டுகளாக ஒலியியல், ஒலியுறுப்புக்களும் அவற்றின் தொழிலும், ஒலியனியல், ஒலியன்களை வகை செய்யும் முறை மற்றும் உருபன் போன்ற மொழிசார் பகுதிகளையும் நோக்கிக் செல்கின்றன எனலாம்.

பொதுவாகப் பார்த்தால், மொழியென்பது சிந்தனைக்கும் செயலுக்கும் கருவியாக இருக்கின்றது. மொழியியல் வழி அறிவியல் ஆய்வுககள் உருவாகி வளர்வதற்கு ஆதாரமாக அமைந்த ஒன்றேடொன்று தொடர்புடைய அறிவோட்டங்கள் இன்றும் மொழி தொடர்பானதும் மொழியியல் சார்ந்தும் அறிவியல் நோக்கிலான தேடலையும் ஆய்வையும் இட்டுச் செல்கின்றது.

Aug 24, 2006

உசாத்துனை நூல்கள்:

டாக்டர். முத்துச்சண்முகம், இக்கால மொழியியல், சென்னை, 1191.

கி. கருணாகரன், வ. ஜெயா, மொழியியல், சென்னை, 1997.

HOCKETT. F. CHARLES, A COURSE IN MORDERN LINGUISTIC, NEW YORK, 1958.

No comments: